
அந்த டைம்ல அறிவொளி இயக்கம் போய்க்கிட்டிருந்துச்சு. அதுலயும் சேர்ந்து வேலை செஞ்சேன். அதுல வேலை செய்றவங்களுக்கு தமிழ்நாடு பசுமை இயக்கம் சார்பா எல்லாருக்கும் வனம், மரம், இயற்கைச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் பத்தி பயிற்சி கொடுத்தோம். நீலகிரியில மரத்துல ஆணியடிக்கிறதுல ஆரம்பிச்சு வெட்டுறது வரைக்கும் எல்லாத்தையும் கண்டிச்சுப் போராட ஆரம்பிச்சேன்.
பிளஸ்டூ வரைக்கும் இப்படித்தான் வாழ்க்கை ஓடுச்சு. அதுக்கப்புறம் வாழ்வாதாரத்துக்கு ஏதாவது வேலை தேடணுமே… குன்னூர் டெப்போவுல பஸ் கண்டக்டர் வேலை கிடைச்சுச்சு. ஓரளவுக்கு வாழ்க்கை செட்டிலான பிறகு, ஒரு ப்ரொஜெக்டர் வாங்குனேன். இன்னைக்கு மதியம் பஸ்ல ஏறினா நாளைக்கு மதியம் வரைக்கும் டியூட்டி. மறுநாள் மதியம் வரைக்கும் ஓய்வு. வேலை முடிஞ்சதும் ப்ரொஜெக்டரை எடுத்துக்கிட்டு ஸ்கூல், காலேஜ்ன்னு கிளம்பிருவேன். பசங்களுக்கு சிலைடு போட்டு, மரம் வளர்க்கிறது, வனத்தைப் பாதுகாக்குறது, கானுயிர்களை காக்குறதுன்னு சொல்லித்தருவேன். எங்கே போனாலும் கைநிறைய மரக்கன்றுகளை அள்ளிக்கிட்டுப் போய் நட்டுடுவேன். அதையெல்லாம் பராமரிக்கிற பொறுப்பை பசங்கக்கிட்ட விடுவேன்.
பஸ்ல போய்க்கிட்டிருப்பேன், எங்காவது மரம் வெட்டுறது தெரிஞ்சா, உடனே பஸ்சை நிறுத்தி போய் தடுப்பேன். இது மர மாஃபியாக்களுக்கு பெரிய பிரச்னையாகி, என்னைக் குறிவைக்க ஆரம்பிச்சாங்க. விளைவு, டிரான்ஸ்பர்… மேட்டுப்பாளையம், திருப்பூர், ஒண்டிப்புத்தூர்ன்னு ஆறு மாசத்துக்கு ஒருமுறை டெப்போ மாறிக்கிட்டே இருக்கும்.

நான் செய்ற இந்த வேலையை போக்குவரத்துறை அதிகாரிகளும் ரசிக்கல. நிறைய நெருக்கடிகள் தந்தாங்க. ஆனா, நான் செய்ற வேலையை நிறுத்தவே இல்லை. பலமுறை மர மாஃபியாக்களால தாக்கப்பட்டிருக்கேன். அச்சுறுத்தப்பட்டிருக்கேன். அதிகாரிகளால அவமானப்படுத்தப்பட்டிருக்கேன். ஆனா, எதுக்கும் கவலைப்படுறதில்லை. இந்தத் தருணத்துல ‘ஈகோ வாரியார்’ன்னு ஒரு தேசிய விருது எனக்கு அறிவிச்சாங்க. அதை வாங்க டெல்லிக்குப் போகணும். டெப்போவுல லீவ் கேக்குறேன், ‘லீவெல்லாம் தரமுடியாது’ன்னு சொல்லிட்டாங்க. ஒரு லீவ்க்கு ஒரு வருஷ இங்கிரிமெண்ட் கட் ஆகும். நான் நாலு நாள் லீவ் போட்டு தேசிய விருது வாங்கப்போனேன். நாலு வருடத்துக்கு இங்கிரீமெண்ட் கட். அந்த விருதை எனக்கு அப்போ துணை ஜனாதிபதியா இருந்த முகமது ஹமீத் அன்சாரி வழங்கினார்…” என்கிறார் யோகநாதன்.
பள்ளி, கல்லூரிகளில் ஏறியிறங்கி சூழலியல் விழிப்புணர்வு ஊட்டுவது, போகுமிடங்களில் எல்லாம் மரக்கன்றுகளைக் கொண்டுபோய் நடுவது, அவற்றைப் பராமரிப்பது அல்லது அங்குள்ளவர்களை பராமரிக்க வைப்பது, சூழலியலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு களத்துக்கே போய் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடுவது என யோகநாதன் இடைவிடாது இயங்கிக்கொண்டே இருந்தார்.
2009-ல் யோகநாதனை அழைத்தார், தொழிலதிபர் முகேஷ் அம்பானி.