கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த 13-ம் தேதி வெளியாயின. என அதில் மொத்தம் உள்ள ஆறு மாநகராட்சிகளில் நான்கு மாநகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ஒரு மாநகராட்சியை சி.பி.எம் கூட்டணியும், ஒரு மாநகராட்சியை பா.ஜ.க-வும் கைப்பற்றியுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சிகள் நகராட்சிகள் ஆகியவற்றிலும் காங்கிரஸ் அதிக அளவு சீட்டுகளை வென்றுள்ளது. 1200 உள்ளாட்சி அமைப்புகளில் 23,576 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி 7,682 உதுப்பினர்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது. சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த 7,301 உறுப்பினர் வென்றுள்ளனர். முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த 2788 பேரும், பா.ஜ.க-வைச் சேர்ந்த 1886 பேர் வென்றுள்ளனர்.
சி பி.ஐ கட்சியைச் சேர்ந்த 995 பேர் வென்றுள்ளனர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளுக்கு தேர்தலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆளும் சி.பி.எம் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் மற்றும் வரவிருக்கும் சட்டசபை தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ‘அதிதீவிர வறுமை இல்லாத கேரளா’ என கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
மேலும், முதியோர் பென்சன் பெறாத சமூகத்தில் பின்தங்கிய பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மாதம் 1,000 ரூபாய் பெண்கள் பாதுகாப்பு பென்சன் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். முதியோர் பென்சனை 1,600 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக அதிகரித்திருந்தார்.
மேலும், போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்பது போன்ற தாராள திட்டங்களை அறிவித்திருந்தார்.
ஆனாலும், உள்ளாட்சி தேர்தலில் சி.பி.எம் தோல்வியடைந்தது அக்கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.எம். மணி,
“சமூக பென்சன் போன்றவைகளை வாங்கி நன்றாக சாப்பிட்டு, அரசுக்கு எதிராக வாக்களித்து மக்கள் நன்றி மறந்துவிட்டனர். கேரள சரித்திரத்தில் இதுபோன்ற வளர்ச்சிப்பணிகள் நடந்தது இல்லை. நன்றாக சாப்பிட்டவர்கள் அதற்கேற்ப செய்துவிட்டனர்” என்றார்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தனது நிலைபாட்டை மாற்றிய அவர், “நான் அப்படி கூறியது சரியானது அல்ல” என வருத்தம் தெரிவித்தார்.