உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னையில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம் | Provide Increase Financial Aid: Disabled Persons Protest Chennai Collectorate

Spread the love

சென்னை: ஆந்திராவில் வழங்குவதைப் போல, தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவர் வில்சன், மாநில பொதுச்செயலாளர் ஜான்சி ராணி ஆகியோர் தலைமை வகித்தனர். 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போராட்டம் குறித்து மாநில தலைவர் வில்சன், மாநில பொதுச்செயலாளர் ஜான்சி ராணி ஆகியோர் கூறியது: “ஆந்திராவில் சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.6,000 முதல் ரூ,10,000 வரை வழங்கப்படுகிறது. கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.15,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் அதிகபட்சம் ரூ.2,000 வரை வழங்கப்படுகிறது. இதுவும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய் துறை ஆகிய இருவேறு துறைகளின் வாயிலாக வழங்கப்படுகிறது. இதனால் பலருக்கும் முறையாக சேர்வதில்லை. இது குறித்து, பல கட்ட போராட்டம் நடத்தியுள்ளோம். இருப்பினும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆந்திராவில் வழங்குவதை போல மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்று அவர்கள் கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *