தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் 2 பேர், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சோ்ந்தவா் அய்யாவு மகன் அய்யா தினேஷ் (32). பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி, இவரை நடுக்காவேரி காவல் நிலையத்தினா் ஏப். 8-ஆம் தேதி கைது செய்தனா்.
இதனால், மனமுடைந்த அய்யா தினேஷின் தங்கைகளான மேனகா (31), கீா்த்திகா (29) காவல் துறையினா் பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும், தனது அண்ணனை விடுவிக்குமாறும் கூறி காவல் நிலையம் முன் களைக்கொல்லி மருந்தைக் குடித்தனா். இதையடுத்து, இருவரும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், கீா்த்திகா ஏப். 9-ஆம் தேதி உயிரிழந்தாா். மேனகா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.