உத்தரகண்ட் பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலியானதாக இந்திய – திபெத் எல்லை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
பனிச் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் அயராது வேலை செய்வதாக இந்திய ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மணீஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
”மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. அப்பகுதியில் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது” என்று மேலும் அவர் தெரிவித்தார்.