சமீபத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக செய்திகள் வெளியாகின. இந்த மோசடி வடமாநிலங்களில் அதிக அளவில் நடக்கின்றன. அது போன்ற ஒரு மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவம் படிக்க தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் பணம் பெற்று மோசடி செய்திருப்பதாக ஏராளமானோர் புகார் செய்தனர். இப்புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் நீட் தேர்வில் மோசடி, மருத்துவக் கல்லூரி அட்மிஷன் மோசடி போன்றவை தொடர்பாக அபினவ் சர்மா என்பவரை போலீஸார் லக்னோவில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. சர்மா தனது அடையாளத்தை மாற்றி 5 பெயர்களில் வங்கிக் கணக்கு திறந்தது, வெளிநாடு சென்றது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளார்.
ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்னமெரிக்கா, மத்திய ஆசியாவில் உள்ள 110 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்துள்ளார். மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோரை அடையாளம் காண்பதற்காகவே நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகளை நியமித்து இருந்தார்.
மொத்தம் 6 மாநிலங்களில் இந்த ஏஜெண்டுகள் செயின் போன்று செயல்பட்டு வந்தனர். நீட் தேர்வில் ஆட்களை மாற்றி தேர்வு எழுத வைத்து பெரிய அளவில் மோசடி செய்துள்ளார். பி.டெக் முடித்துள்ள சர்மா மோசடி பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளது தெரிய வந்தது.
விமானத்தில் சென்றால் பிஸ்னஸ் வகுப்பில்தான் பயணம் செய்வார். ஹோட்டல்களில் தங்கினால் 7 நட்சத்திர ஹோட்டல்களில்தான் தங்குவார். ரூ. 2 லட்சத்திற்கு கண்ணாடி, பிளாட்டினம் கைக்கடிகாரம் என எப்போதும் ஆடம்பரமாக வாழ்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.