உத்தராகண்ட்டில் மீட்கப்பட்ட ஆன்மிக சுற்றுலா பயணிகளில் 10 பேர் சென்னை திரும்பினர் | 10 of the rescued spiritual tourists from Uttarakhand arrived in Chennai by flight

1312431.jpg
Spread the love

சென்னை: உத்தராகண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கிய 30 ஆன்மிக சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். அதில், 10 பயணிகள் விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை வந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி ஆன்மிக சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். ஆதிகைலாஷ் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது, வழியில் ஆதி கைலாஷில் இருந்து 18 கி.மீ தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஒரு ஆசிரம பகுதியில் 30 பேரும் பாதுகாப்பாக தங்கினர். நிலச்சரிவால் சாலை பாதிக்கப்பட்டதால், அவர்கள் 6 நாட்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். போதிய உணவு, வாகனத்துக்கான எரிபொருள் வசதி இல்லாததால் 30 பேரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்த தகவல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்தது. உடனடியாக முதல்வர், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மூலமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமாருக்கு தெரிவித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார். கடலூர் மாவட்ட நிர்வாகம், உத்தராகண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, தமிழகத்தை சேர்ந்த ஆன்மிக சுற்றுலா பயணிகளை ராணுவம், ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

முதியவர்கள் அதிக அளவில் இருந்ததால், வானிலை சீரானதும், கடந்த 15-ம் தேதி ஹெலிகாப்டர் மூலமாக 30 பேரும் காயம் ஏதுமின்றி மீட்கப்பட்டு, 20 கிமீ தொலைவில் உள்ள தர்சூலா என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.இதுபற்றி தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மீட்கப்பட்டவர்களுடன் போனில் பேசினார்.

அப்போது, “தமிழர்கள் 30 பேரையும் மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். யாரும் கவலைப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள்” என்று உறுதி அளித்தார். இதனால், ஆன்மிக சுற்றுலா பயணிகள் ஆறுதல் அடைந்தனர்.

இதையடுத்து, தர்சுலாவில் இருந்து 30 பயணிகளும் 2 வேன்களில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். டெல்லியில் தமிழக அரசின் அதிகாரிகள், 30 பேரையும் வரவேற்று, அவர்களுக்கு, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். 20 பேர் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 10 பேர் டெல்லியில் தங்க வைக்கப்பட்டனர். செவ்வாய்க்கிமை காலை டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் 10 பயணிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை வந்த ஆன்மி சுற்றுலா பயணிகள் 10 பேரையும், தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அவர்கள் கார்கள் மூலம் சிதம்பரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் ஆன்மிக சுற்றுலா பயணிகள் கூறியது: “உத்தராகண்ட் மாநிலத்தில், ஆதிகைலாஷ் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போது, வழியில் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, நாங்கள் அங்கு சிக்கிக் கொண்டு பெரும் அவதி அடைந்தோம். ஒரு கட்டத்தில், நாங்கள் மீண்டு வருவோமா என்ற சந்தேகம் கூட எங்களுக்கு ஏற்பட்டது. ஆனாலும் எங்களை ஆதி கைலாசர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு, செயல்பட்டோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் மீது மிகுந்த அக்கறை எடுத்து, அரசு அதிகாரிகள் மூலம் எங்களை மீட்க நடவடிக்கை எடுத்தார்.

எங்களை பத்திரமாக தங்க வைத்து, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் செய்து கொடுத்தனர். மழை ஓய்ந்ததும் ஹெலிகாப்டர் மூலம் எங்களை பத்திரமாக மீட்டு, சாலை வழியாக டெல்லிக்கு அழைத்து வந்தனர். மத்திய, மாநில அரசுகள், குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எங்களை மிகுந்த பாதுகாப்புடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட, இந்திய ராணுவத்துக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *