உத்தர பிரதேசத்தில் ஹாத்ரஸ் பகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்று இன்று பார்வையிடுகிறார் .
உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், “போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தனியார் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மாலையில் நிகழ்ச்சி முடிந்து, மைதானத்தைவிட்டு மக்கள் கிளம்பும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது.
“போலே பாபா’விடம் ஆசி பெறவும், அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் மக்கள் முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டு, ஒருவர் மீது மற்றொருவர் விழுந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி 108 பெண்கள், 7 குழந்தைகள், ஒரு ஆண் என 116 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 72 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாநில தலைமைச் செயலர் மனோஜ் குமார் சிங் தெரிவித்தார். மைதானம் வழுக்கும் தன்மையுடன் இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு அளவுக்கு அதிகமான கூட்டம் கூடிய நிலையில், போதிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்களில் சிக்கந்தர ராவ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரேயொரு மருத்துவர் மட்டுமே பணியில் இருந்ததாகவும், ஆக்சிஜன் வசதியும் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில் ஹாத்ரஸ் பகுதியில் சம்பவம் நடந்த இடத்தினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நேரில் பார்வையிடுகிறார். இதனிடையே இந்த சம்பவத்தில் போலே பாபாவின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் அறிய ஹாத்ரஸ் மாவட்ட நிர்வாகம் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.
ஹாத்ரஸ் – 9454417377
ஆக்ரா மண்டலம் -7839866849
அலிகார் மலைத்தொடர் -7839855724
ஆக்ரா மலைத்தொடர் -7839855724
எட்டா – 9454417438
அலிகார் – 7007459568