மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விநாடிக்கு 1,34,115 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் காலை 107.69 அடியாக உயர்ந்தது. முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 12 அடியே வேண்டும்.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரில் கடந்த 2 வாரங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று (சனிக்கிழமை) மாலையில் விநாடிக்கு 1,18,296 கன அடியாகவும், இரவு 1,23,184 கன அடியாகவும் இருந்தது. தொடர்ந்து, நீரின் அளவு அதிகரித்து, இன்று காலை 8 மணிக்கு விநாடிக்கு நீர்வரத்து 1,34,115 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 1.34 லட்சம் கன அடிக்கு நீர்வரத்து வருவதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் நேற்று காலை 99.11 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 107.69 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு 63.69 டிஎம்சியாக இருந்த நிலையில், 75.16 டிஎம்சியாக உயர்ந்தது. கடந்த ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8.58 அடியும், நீர் இருப்பு 11.47 டிஎம்சியும் உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர் இருப்பு 93 டிஎம்சியை எட்ட இன்னும் 17 டிஎம்சி தான் வேண்டும். அதேபோல், முழு கொள்ளளவான 120 அடியை எட்ட 12 அடி வேண்டும். இதனிடையே, ஒகேனக்கலுக்கு இன்று காலை விநாடிக்கு 1.52 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், கர்நாடக அணைகளில் இருந்தும் அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் உயர வாய்ப்புள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணை முழு கொள்ளளவை நாளை மாலைக்குள் எட்ட வாய்ப்புள்ளது. இதனால் அணையில் இருந்து டெல்டாவுக்கு நாளை தண்ணீர் திறக்கவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், காவிரி கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நீர்நிலை பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, தண்ணீர் வரும் போது, செல்பி எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில், அப்பகுதியில் உள்ள வருவாய் துறையினர், போலீஸார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.