எம்ஜிஆர் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்தார். பெரியார் கொள்கை பற்றி பேசியது இல்லை. ஆனால், அவரது கொள்கைகளை நிறைவேற்றி காட்டினார். பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை நிறைவேற்றி காட்டியவர் எம்ஜிஆர். எம்ஜிஆரை இதயக்கனி என்று கூறியவர் அண்ணா.
1986-ல் அண்ணாவை மறக்காமல் இரு மொழி கொள்கை தொடரும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் எம்ஜிஆர். அவர் தனது வாழ்நாளில் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சாதனைகளை படைத்தவர்.
மக்களிடம் அன்பை பெற்றிருந்தார். கடைசி வரை மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என எண்ணினார்.
1977 முதல் 1987 வரை தமிழகத்தில் நல்லாட்சி செய்தார். யாரையும் புண்புடுத்தி பேசுவதை விரும்ப மாட்டார். மற்றவர்களை மதித்தார். மக்களுக்காக வாழ்ந்தார். அவர் என்றைக்கும் நம் நினைவில் இருப்பார். தமிழர்கள் எங்கிருந்தாலும் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
திரைப்பட பாலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “விஐடி வேந்தர் விசுவநாதனை அரசியலில் அறிமுகப்படுத்தியது அண்ணா தான். எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். கொடுக்கும் பழக்கம் கொண்ட கொடையாளர் எம்ஜிஆர். எம்ஜிஆர் மறைந்து 38 ஆண்டு காலம் ஆகியும் தமிழக அரசியலில் புவிஈர்ப்பு விசையாக இருப்பது எம்ஜிஆர் எனும் மூன்று எழுத்து மந்திரச்சொல். யாரேனும் ஒருவர் உதவி கேட்டால் செய்யக்கூடிய மாண்பு உள்ளவர். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றிட அதிமுகவைத் தொடங்கினார். சாமானியவர்களையும் அடையாளப்படுத்தினார். நம் கையில் ரேகை இருக்கும். எம்ஜிஆர் கையில் இருந்தது ஈகை. அதனால் அவர் சூடினார் வாகை. அவரை போல வசதி, வாய்ப்புகள் வந்தாலும் மற்றவர்களுக்கு உதவிடும் குணம் வேண்டும். மனித நேயம் மிக்க தலைவர் எம்ஜிஆர். எல்லோர் மனதையும் கவர்ந்தவர்” என்றார்.
விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் வரலாறு படைத்த தலைவர் எம்ஜிஆர். வரலாற்றை படைக்க படைக்கப்பட்ட தலைவர். பொருளாதாரம் தெரியாதவர் என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், எனக்கு வறுமை தெரியும், அதை நான் ஒழிப்பேன் என்று பதில் அளித்தவர். கட்சி தொண்டர்களின் உயிர்களுக்கு மதிப்பு தந்தவர் எம்ஜிஆர்.
இப்போது திரைப்படங்களில் தணிக்கை பிரச்சினை பற்றி பரவலாக அறிகிறோம். ஆனால், எம்ஜிஆர் காலத்திலும் திரைப்படங்களில் பாடல்களில் தணிக்கை இருந்தது. தற்போது கார்ப்பரேட் உலகில், சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் அதிக நிதி செலவிடப்படுகிறது.
ஆனால், எம்ஜிஆர் அந்த காலத்திலேயே சமூகத்திற்கு ஏராளமான நிதி வழங்கியவர். எம்ஜிஆர் சிறந்த தலைமைப்பண்பை கொண்டவர். அரசியல் ரீதியாக தன்னை திட்டியவர்களுக்கும் உதவி செய்தவர். எம்ஜிஆரின் பாடல்களை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழக முதல்வர் ஸ்டாலின், எம்ஜிஆர் பாடல்களை ரசித்து கேட்பவர் தான். தமிழகத்தில் ஏழை பணக்கார வித்தியாசம் இல்லாமல் ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர்” என்றார்.
முன்னதாக, கவிஞர் வசந்தநாயகன் எழுதிய “இதயம் கவர்ந்த எம்ஜிஆர்” நூல் வெளியிடப்பட்டது. நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் பா.மோகன், பாண்டுரங்கன், சேவூர் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.சி.வீரமணி, எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் பார்த்திபன், லோகநாதன், சூரியகலா, சம்பத், மற்றும் எம்ஜிஆரின் உறவினர்கள் விஜயகுமார், மினி, லதா ராஜேந்திரன், சீதா பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.