விழுப்புரம் : விழுப்புரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு புகாருக்குள்ளான கோயில் வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது.
விழுப்புரம் – கிழக்கு பாண்டி சாலையில் மின்வாரியச் சாலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம், தனியார் தொழிற்சாலை போன்றவை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலைக்கு செல்லும் சாலையில் ஏழை மாரியம்மன் கோயில் மற்றும் 50 வீடுகள் அமைந்துள்ளன.
இந்த நிலையில் தங்கள் தொழிற்சாலைக்கான வாகனம் செல்ல வழி இல்லாமல் பாதிக்கப்பட்டதாகவும், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கோயில், வீடுகளை அகற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் தொழிற்சாலை உரிமையாளர் புகாரளித்தும், நடவடிக்கை இல்லையாம். இதைத் தொடர்ந்து 2022-ஆம் ஆண்டில்சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் பலமுறை அறிவுறுத்தியும் ஆக்கிரமிப்புகள் அகற்றிக் கொள்ளப்படவில்லை. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி, வருவாய், காவல், தீயணைப்புத்த துறை அலுவலர்கள் கடந்த மாதம் 30ஆம் தேதி அப்பகுதிக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனர்.
அப்போது பொதுமக்களுக்கும் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் கால அவகாசம் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து இப்பகுதியில் குடியிருந்து வந்தவர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி 42 பேருக்கு திருப்பாச்சனூர் கிராமத்தில் வீட்டுமனைப் பட்டாக்களை வனத்துறை அமைச்சர் க. பொன்முடி, எம்எல்ஏ இரா.லட்சுமணன் ஆகியோர் வழங்கினர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் நகராட்சி ஆணையர் எம்.ஆர். வசந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை காலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.
சாலையின் மையப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த ஏழை மாரியம்மன் கோயில் இடிக்கும் பணி தொடங்கியது. பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிற்பகலுக்குள் கோயில் இடிக்கப்பட்டுவிடும் என்று நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
விழுப்புரம் ஏடிஎஸ்பிக்கள் தினகரன், இளமுருகன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.