கன்னியாகுமரி அருகே உள்ள மருங்கூரில் செயல்பட்டுவரும் தனியார் ரிசார்டில் தடைச் செய்யப்பட்ட உயர் ரக போதை விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.பி தலைமையிலான டீம் அங்குசென்று உயர்ரக போதைபொருட்களை பறிமுதல் செய்தனர்.
அங்கு குழுமியிருந்த 46 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கேரள மாநிலம் கோவளத்தைச் சேர்ந்த பிதுன்(30), பெங்களூரைச் சேர்ந்த வேலன்ஸ் பால் (36), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த கோவிந்த கிருஷ்ணா (27), கோகுல் கிருஷ்ணன் (34), இவரது மனைவி செளமி(33), மருங்கூரைச் சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் ராஜூ(64), கோவாவைச் சேர்ந்த ஜெயராஜ் சிங் சவ்டா (35), பெங்களூரைச் சேர்ந்த சையத் பர்ஷான் (35) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பலரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக வந்ததால் அவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவில்லை. மேலும், விசா காலாவதி முடிந்த பின்னரும் தங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த பேவாஹ் அன்சாரி (30) என்ற பெண் மீதும் தனியாக வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம், “கோகுல் கிருஷ்ணன் என்பவர் கோவா-வை மையமாகக்கொண்டு டூரிஸ்ட் ஏஜென்சி ஒன்று நடத்திவந்தார். அவருக்கு பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் நட்பு கிடைத்தது. அந்த குழுவினர் இணைந்து ஒவ்வொரு நாட்டுகளிலும் போதை கூடுகையை அவ்வப்போது நடத்தி வந்தனர். கன்னியாகுமரியில் நடைபெற்ற போதை கூடுகைக்காக கோகுல கிருஷ்ணனின் குழந்தைக்கு பிறந்தநாள் எனக்கூறி ரிசாட் புக் செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு புரியும் வகையில் அழைப்பிதழ்கள் பதிவு செய்துள்ளார். டிசம்பர் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை அந்த கூடுகை நடந்தது. 9-ம் தேதி இரவு அவர்கள் சிக்கினர். இதுவரை உள்ள போதை கும்பலில் இவர்கள் புதுவிதமாக உள்ளனர்.