சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் அருகே நடைபெற்ற தகராறு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதின்றம் அருகே வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது திருமாவளவன் சென்ற கார் மோதுவதுபோல் சென்றுள்ளது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், அவரது வாகனத்தை நிறுத்திவிட்டு, ஏன் இப்படி காரை அஜாக்கிரதையாக ஓட்டி வருகிறீர்கள் என கண்டித்துள்ளார். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் தகராறு, கைகலப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக திருமாவளவன் முகநூல் நேரலையில் பேசியதாவது: வேண்டுமென்றே வாக்குவாதம் அந்த வழக்கறிஞர் என் வாகனம் முன் தன் வண்டியை நிறுத்திவிட்டு, வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கைகளை ஓங்கியவாறு வந்தார். அவர் தொடர்ந்து எதிர்த்து பேசவே கட்சியினர் அவரை தாக்க முயன்றனர். அதற்குள்ளாக காவல் துறையினர் அவரை பார்கவுன்சில் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இதுதான் நடந்தது.
என் வாகனம் அவர் வண்டி மீது மோதவில்லை. ஆனால் சிலர் பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். அண்ணாமலை போன்றவர்கள் இதற்கு வக்காலத்து வாங்கி எனக்கு எதிரான கருத்துகளைப் பரப்புகின்றனர். விபத்து என்று சொல்லும் வகையில் எதுவும் நடைபெறவில்லை. இதை பெரிதுபடுத்தி தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவத்தை திசை திருப்ப முயல்கின்றனர். ஆனால் இதற்கு பலியாகாமல் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர் அணியும், அமைப்பு ரீதியான மாவட்டங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.