சென்னை: உயர் நீதிமன்றம் எதிரே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் மீது விசிக-வினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இரு தினங்களுக்கு முன்னர், வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயற்சி நடந்தது.
இது தொடர்பாக வழக்கஞர் ராகேஷ் கிஷோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர், மதியம் 2.30 மணி அளவில் உயர் நீதிமன்றம் எதிரே (பார்கவுன்சில் முன்பு) என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது திருமாவளவன் சென்ற கார் மோதுவதுபோல் சென்றுள்ளது.
இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், அவரது வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, மோதுவதுபோல் வந்த வாகனத்தில் இருந்தவர்களிடம் ஏன் இப்படி காரை அஜாக்கிரதையாக ஓட்டி வருகிறீர்கள் என கண்டித்துள்ளார். இதையடுத்து, திருமாவளவனின் காரிலிருந்து இறங்கிய விசிக-வினர், அவரிடம் வாக்குவாதம் செய்ததோடு சரமாரியாக தாக்கினர். அவர்களிடமிருந்து தப்ப முயன்ற போது விரட்டிச் சென்று தாக்கினர்.
மேலும், அவரது இருசக்கர வாகனத்தை வேகமாக பிடித்து சாலையில் தள்ளினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது அதிமுக முன்னாள் வட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான நந்தம்பாக்கத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பது தெரியவந்தது.
அவர் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசிக-வினர் மீது எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், “வேண்டும் என்றே எனது வாகனத்தில் இடிப்பதுபோல் வேகமாக வந்து விட்டு என் மீதே தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.
இதேபோல், விசிக தரப்பிலும் வுழக்கறிஞர் ராஜீவ்காந்தி மீது புகார் அளிக்கப்பட்டது. அதில், “திருமாவளவன் வாகனத்தை திட்டமிட்டு வழிமறித்து தாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மோதுவதுபோல் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தினேன். அந்த நபரின் நோக்கம் எங்கள் தலைவரை தாக்க வேண்டும் என்பதுதான்.
எனவே, சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரில் தெரிவித்திருந்தனர். மேலும், அந்த நபரை கைது செய்ய கோரி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த இரு புகார்கள் மீதும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க வழக்கறிஞர் ராஜீவ்காந்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.