சிவகங்கை: “கரூர் சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவர் அங்கு செல்லாமல் இருந்திருக்கலாம்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
விடுதலை போராட்ட வீரர்கள் மருதுசகோதரர்கள் குருபூஜையையொட்டி, இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் அவர்களது நினைவிடத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தலைமையில் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் கருப்புமுருகானந்தம், மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, ஓபிசி அணி மாநிலச் செயலாளர் நாகேஸ்வரன் ஆகியோர் மரியாதை செய்தனர்.
பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக விடுதலை போராட்ட வீரர்களை மதித்து, அவர்களின் பெருமையை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கிறது. கரூரில் மக்களுக்கே பாதுகாப்பு இல்லை. அங்கு சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அனைவருக்கும் சந்தேகம் உள்ளது. அதையே அவரும் கருதியிருக்கலாம்.
அதனால் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறியிருக்கலாம். மருதுசகோதரர்கள் நினைவிடத்தில் உறுதியளிக்கிறேன் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். திமுக அரசு மக்கள் விரோதமாக இருப்பதால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
இந்த ஆட்சியில் கரூர் கூட்டநெரிசலில் 41 பேர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் 65 பேர் என தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகின்றன. 53 சதவீத போக்சோ குற்றங்கள் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு, சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. காவல் நிலையங்களில் பெட்ரோல் குண்டு வீசுகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.