உயிர் பலி வாங்க காத்திருக்கும் பாலவாக்கம் – கொட்டிவாக்கம் உட்புற சாலை! | Palavakkam – Kottivakkam Internal Road Waiting for Life Sacrifice!

1274403.jpg
Spread the love

சென்னை: வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வாகன நெரிசல் கணிசமாக அதிகரித்துள்ளது. அதுவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினர் காலையில் ஒரே நேரத்தில் புறப்படுவதால் வாகன நெரிசல் இன்னும் அதிகளவில் உள்ளது.

போதாத குறைக்கு சிதிலமடைந்த சாலைகளால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகரும் நிலை சென்னையின் பல்வேறு இடங்களில் காணப் படுகிறது. அதேபோன்றதொரு நிலை கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாலவாக்கம் செல்வோர் பல்கலை நகர் வளைவு வழியாக சென்றால் பாலவாக்கம் கடற்கரையை அடையலாம். இதனால், அந்த கடற்கரைக்கு காலை, மாலை நேரங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அந்த சாலையை பெரிதும் நம்பி உள்ளனர்.

அதுமட்டும் அல்லாமல் அந்த வழியாக சென்று உட்புற சாலையை பிடித்தால் ஜெகநாதன் தெரு சாலையை சென்றடையலாம். இந்த சாலை வழியாக கொட்டிவாக்கம், திருவான்மியூர், அடையாறு செல்லலாம். மேலும், பெசன்ட் நகர் மற்றும் அங்குள்ள கடற்கரைக்கும் செல்லலாம். அனைத்துக்கும் இணைப்பு சாலை இந்த ஜெகநாதன் தெரு சாலைதான். சில மாதங்களுக்கு முன்புவரை இந்த சாலை மிகச் சிறப்பாக இருந்தது.

ஆனால், தற்போது சாலை நடுவே ரயில் தண்டவாளம்போல் நெடிய பள்ளம் தோண்டப்பட்டது. பிறகு, சரியாக மூடப்படாமலும் செப்பனிடப் படாமலும் அப்படியே விடப்பட்டுள்ளது. காலை, மாலை நேரங்களில் கொட்டிவாக்கத்தில் உள்ள பள்ளிகளுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர் மற்றும் பள்ளி வாகனங்கள் அதிகளவில் அந்த வழியாக செல்கிறது. இந்த பழுதடைந்த சாலையால் எந்நேரமும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் பாலவாக்கம் பல்கலை நகர் சாலையிலும் இதேபோல் பள்ளம் தோண்டப்பட்டு பாதி மூடப்பட்டுள்ளது. அதுவும் சரியான முறையில் மூடப்படாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். மேலும், பாலவாக்கம் பல்கலை நகர் வளைவு அருகே, திறந்த வெளி குடோன்போல் மணல்கள், கட்டுமானக் கழிவுகளை தினமும் கொண்டு வந்து குவித்து வைத்தும், பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்துவதுமாக பணிகள் நடைபெறுகின்றன.

இதனால், அந்த சாலைசேதம் அடைவதோடு, கழிவு மணல் சாலையில் தினமும் சிதறி கிடக்கிறது. இதனால், புழுதி பறந்து அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, இதுபோன்ற சேதமான சாலைகளை சீரமைத்து விபத்து உயிரிழப்பு ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி வழியாக செல்வோரின் வேண்டுகோளாக உள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கு, தனது பிள்ளையை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற ரம்யா (37) என்பவர் கூறுகையில், ‘ஜெகநாதன் தெரு சாலை வழியாக எனது பிள்ளையை தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவருகிறேன். தற்போது இந்த சாலைசெயற்கையாக சேதப்படுத்தப் பட்டதுபோல் உள்ளது. இங்கு நடைபெற்று வரும் பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. எனவே, எது எப்படி இருந்தாலும் இந்த சாலையால் உயிர் சேதம் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க வேண்டும்’ என்றார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “குடிநீர் குழாய் உட்பட மேலும் சில காரணங்களுக்காக சாலையில் பள்ளம் தோண்டப் பட்டது. அப்பணி நிறைவடைந்த உடன் சாலை சீரமைக்கப்படும்’ என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *