சென்னை: ‘வங்கக் கடலில் சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இம்மாதம் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (டிச.7) காலை 8.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைந்து, மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிச.11- ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை – தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (டிச.7) முதல் டிச.9 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.10ம் தேதி, கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.11ம் தேதி, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.12ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக மழையும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.13ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில், இன்று (டிச.7) தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச.8ம் தேதி, தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிச.9ம் தேதி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச.10ம் தேதி, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிச.11ம் தேதி, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.