உரையை படிக்காமல் இந்தாண்டும் வெளியேறினார் ஆளுநர்: தேசிய கீதம் இசைக்கவில்லை என உரையை  புறக்கணித்தார் – Kumudam

Spread the love

சட்டமன்ற நடைமுறைப்படி கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால், தனது நீண்டகாலக் கோரிக்கையான ‘தேசிய கீதத்தை’ அவைத் தொடக்கத்தில் இசைக்கவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்க மறுத்துவிட்டார். தேசிய கீதத்திற்குப் பின்பே தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஆளுநர், தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாகச் சில நிமிடங்களிலேயே அவையை விட்டு வெளியேறினார்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான இந்த மோதல் இது முதல் முறையல்ல. கடந்த 2023-ஆம் ஆண்டு, அரசு கொடுத்த உரையில் சில பகுதிகளைத் தவிர்த்து ஆளுநர் வாசித்ததால், சபாநாயகர் அதனை ரத்து செய்துவிட்டு முழு உரையை வாசித்தார். அதைத் தொடர்ந்து 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளிலும் இதே தேசிய கீத விவகாரத்தை முன்வைத்து ஆளுநர் உரையைப் புறக்கணித்தார்.

இன்று காலை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தந்தபோது, சபாநாயகர் அப்பாவு அவருக்கு மலர்க்கொத்து வழங்கி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு புத்தகத்தைப் பரிசாக அளித்துச் சிறப்பான வரவேற்பு அளித்தார். சுமூகமான முறையில் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த சூழலில், ஆளுநரின் இந்தத் திடீர் புறக்கணிப்பு ஆளுங்கட்சி வரிசையில் இருந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆளுநர் வெளியேறியதைத் தொடர்ந்து, தமிழக அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தைச் சபாநாயகர் அப்பாவு அவையில் வாசிக்கத் தொடங்கினார். ஆளுநர் ஒருவேளை உரையை வாசிக்காவிட்டாலும், அரசுத் தயாரித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்படும் என்ற விதிமுறையைப் பின்பற்றிச் சபாநாயகர் தனது பணிகளைத் தொடர்ந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *