புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 22 வருடங்களில், ஓய்வுபெற்றவர்கள், பணியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சுமார் 54,000. இதில் 48 ஆயிரம் பேருக்கு மேல் ஒன்-டைம் செட்டில்மெண்ப் பெற்றுவிட்டார்கள். கொஞ்சம் பேர் மட்டும் பிற்காலத்தில் நியாயமான ஓய்வூதியம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் செட்டில்மெண்ட் வாங்காமல் காத்திருக்கிறார்கள். தற்போது அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில், ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தப்பட்ச பணிக்காலமாக 10 ஆண்டுகளும் முழுப் பணிக்காலமாக 30 ஆண்டுகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டக் காலத்தில் பணியில் சேர்ந்து ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்ற 48,000 பேருக்கும் சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.

“2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்து இதுநாள் வரை ஓய்வுபெற்று செட்டில்மெண்ட் முழுவதையும் வாங்கியவர்களுக்கும் கருணை ஓய்வூதியம் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். உண்மையிலேயே இதைப் பாராட்டி வரவேற்க வேண்டும். ஒன்டைம் செட்டில்மெண்டாக எவ்வளவு பணம் கைக்குவந்தாலும் ஐந்தாறு மாதங்களில் அது காலியாகிவிடும். அதற்கென்று ஏதோ ஒரு தேவை வந்துவிடும். மாதாந்திரம் ஓய்வூதியம் கிடைக்கும்போது அவர்களுக்கு பெரிய நம்பிக்கை ஏற்படும். 40 லட்ச ரூபாய் செட்டில்மெண்ட் வாங்கியவர், சில ஆண்டுகளில் ஒன்றுமே இல்லாமல் கூலி வேலைக்குச் சென்றதை நான் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் இது மிகச்சிறந்த முன்னெடுப்பு. இதனால் சுமார் 48,000 பேர் இதனால் பயன்பெறுவார்கள்…” என்கிறார் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சே.பிரபாகரன்
“ஆனாலும் இது முழுமையானதல்ல. இந்த ஓய்வூதியத் திட்டத்திலும் ஊழியருடைய பங்களிப்பு 10% தொடர்கிறது. குறைந்தபட்ச பணிக்காலகத்தை நிறைவு செய்யாத ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு என்று கூறப்படவில்லை. ஊழியர் பங்களிப்பு பெறுவதை மட்டும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் நிச்சயமாக இது பழைய ஓய்வூதியத் திட்டம் தான் என்பதில் சந்தேகமில்லை. முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்…” என்கிறார் பிரபாகரன்.
தினந்தோறும் புதிய புதிய பெயர்களில் திட்டங்களை அறிவிக்கிறது, தமிழக அரசு. அதற்காக புதிய பணியிடங்களை உருவாக்குவதில்லை. போதாக்குறைக்கு காலிப் பணியிடங்கள் ஏராளம் இருக்கின்றன. மிகுந்த அயற்சியோடு அரசு ஊழியர்கள் பணியாற்றும் சூழலில், தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நிச்சயம் அவர்களுக்கு உற்சாகமூட்டும்.
அது மக்கள் பணியில் எதிரொலித்தால் நல்லது!