இந்த நிலையில், பிரதமர் மோடி மாநிலங்களையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரையாற்றினார். அதில், “விக்சித் பாரத் பயணத்தில், கடந்த ஆண்டுகள் நாட்டின் விரைவான வளர்ச்சிக்குரிய ஆண்டுகளாக இருந்துள்ளன. இது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட ஒரு காலகட்டமாக இருந்துள்ளது.
நாடு சரியான திசையில் அதிவேகமாக முன்னேறிச் செல்கிறது. 21-ம் நூற்றாண்டின் முதல் காலாண்டு நிறைவடைந்துவிட்டது. ஆனால், கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் இரண்டாம் காலாண்டு எப்படித் தீர்க்கமானதாக இருந்ததோ, அதேபோல் இந்த இரண்டாம் காலாண்டும் தீர்க்கமானதாக அமையப் போகிறது. வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் திசையில், இந்த இரண்டாம் காலாண்டும் அதே அளவுக்குத் திறமையானதாக இருக்கப் போகிறது என்பதை என்னால் தெளிவாகக் காண முடிகிறது.
இந்தியா பல நாடுகளுடன் எதிர்காலத்திற்கு ஏற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது. கடந்த சில நாள்களில், உலகின் 9 பெரிய மற்றும் முக்கியமான நாடுகளுடன் நாங்கள் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம், இந்த ஒப்பந்தங்களிலேயே மிக முக்கியமான ஒன்றாகும். இன்று, இந்தியா பல நாடுகளின் நம்பகமான பங்காளியாகத் திகழ்கிறது. மேலும் உலகின் நலனுக்காக நாங்கள் எங்கள் பங்கை ஆற்றி வருகிறோம். இன்று, முழு உலகமும் “குளோபல் சௌத்’ (உலகளாவிய தெற்கு) பற்றிப் பேசுகிறது.