தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss World), மே 10 ஆம் தேதியில் தொடங்கியது. மே 31 ஆம் தேதிவரையில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டு சார்பாக பங்கேற்ற அந்நாட்டு அழகி மில்லா மேகி, போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாகக் கூறி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தெலங்கானாவுக்கு மே 7 ஆம் தேதியில் வந்தடைந்த மில்லா, மீண்டும் மே 16 ஆம் தேதியிலேயே இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டார். குடும்ப சூழ்நிலையின் காரணமாக, நாடுதிரும்புவதாகக் கூறிச் சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் நேர்காணலில் அவர் பேசியதாவது, போட்டியில் போட்டியாளர்கள் 24 மணிநேரமும் ஒப்பனையுடனும், கண்கவர் ஆடைகளுடனும்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். தொடர்ந்து, போட்டியில் 6 விருந்தினர்கள் கொண்ட ஒவ்வொரும் மேசையிலும் 2 பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே, நாங்கள் அமர்த்தப்பட்டோம்.