ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் `டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் `ஜாகுவார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாகனங்களின் உற்பத்தி ஆலை அமைக்க கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார். தொழிற்சாலைக் கட்டமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்றைய தினம், தொழிற்சாலையைத் திறந்துவைத்து முதல் வாகன இயக்கத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், “நம்முடைய அன்புக்குரிய டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் முதலில் உரையாற்றும்போது, `இந்த நாள் டாடா குழுமத்துக்கு ஒரு பொன் நாள்’ என்று பெருமையோடு, மகிழ்ச்சியோடு சொன்னார். அவர் ஒன்றை மறந்துவிட்டார். நம்முடைய தமிழ்நாட்டுக்கும் ஒரு பொன் நாள். குறிப்பாக, தமிழகத்தின் தொழில்துறைக்கான பொன் நாள். அந்த வகையில், பனப்பாக்கம் சிப்காட்டில் `டாடா ஜே.எல்.ஆர் நிறுவனத்தின் மேம்பட்ட பயணிகள் வாகன உற்பத்தி திட்டம்’ தொடங்கிவைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். டாடா குழுமம், தமிழ்நாடுமீது வைத்திருக்கிற நம்பிக்கை, பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதுவும், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ஐந்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்போகிற இப்படியொரு சிறப்பானத் திட்டத்தை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கியதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் இங்குப் பங்கேற்றியிருப்பது, எங்கள் எல்லோருக்கும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அவர் இருப்பது, அவருக்கு மட்டும் அல்ல, நம்முடைய தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய பெருமை. 2024-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடந்த அடிக்கல் நாட்டுவிழாவில், `விரைந்து இந்தப் பணிகளை முடித்து, திறப்பு விழாவுக்கு நீங்கள் வரவேண்டும்’ என்று சந்திரசேகரனிடம் நான் கோரிக்கைவைத்திருந்தேன். அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, இந்த நிகழ்ச்சிக்குவந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தியாவின் தொழில் முகங்களில், முக்கியமானது நம்முடைய டாடா நிறுவனம். ஸ்டீல், ஐ.டி, ஏர்லைன்ஸ், ஆட்டோமொபைல், நுகர்வோர்ப்பொருள்கள், ஹாஸ்பிடாலிட்டி, தொலைத்தொடர்பு போன்ற பலத்துறைகளில் தடம்பதித்து, மிகப்பெரிய சாதனைகள் படைத்திருக்கக்கூடிய குழுமம்தான் நம்முடைய டாடா குழுமம்.
உலக அளவில், பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிற இந்திய பன்நாட்டுக் குழுமமாகவும் டாடா நிறுவனம் இருக்கிறது. டாடா என்று சொன்னாலே, அதற்கு ஒரு `பிராண்ட் வேல்யூ’ உண்டு. அப்படிப்பட்ட டாடா நிறுவனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆழமான உறவும் இருக்கிறது. டி.சி.எஸ் நிறுவனம், தாஜ் ஹோட்டல்கள், டைட்டன், டாடா பவர், டாடா எலெக்ட்ரானிக்ஸ்… இவையெல்லாம், அந்த உறவு சரித்திரத்தின் பொன் ஏடுகள். டாடா நிறுவனம், தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கின்ற பெருமைமிகு அடையாளங்கள்.