SWAN (Smart Water Networks Forum) என்ற அமைப்பு உலகெங்கிலும் உள்ள குடிநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் அமைப்புகளை “ஸ்மார்ட்” (Smart) ஆக மாற்றும் ஒரு சர்வதேச லாப நோக்கற்ற அமைப்பாகும். இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், பாரம்பரிய நீர் மேலாண்மை முறைகளை மாற்றி, தரவு (Data) மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நீரைச் சிக்கனமாகவும் திறம்படவும் கையாள்வதாகும்.
இந்த அமைப்பில் அரசு நீர் வாரியங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் உறுப்பினராக இணையமுடியும். அதன் அடிப்படையில், 5-வது மூத்த நீர் பயன்பாட்டு ஆலோசனைக் குழுவில் பெங்களூரு நீர் வாரியத் தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.
பெங்களூரு நகரின் குடிநீர் மேலாண்மையில் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் புகுத்திய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு சார்ந்த (Data-driven) நவீனத் தொழில்நுட்ப முயற்சிகளுக்காக இந்த உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சர்வதேசக் குழுவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல், பிரேசில், இந்தியா என 6 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் மட்டுமே இருக்கின்றனர். மேலும், இந்த அமைப்பின் உயர்மட்டக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே இந்திய அதிகாரி என்ற சிறப்பையும் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் பெற்றிருக்கிறார்.