விழுப்புரம்: உளவுத்துறை சரியாக பணியாற்றி இருந்தால் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு இருக்கமாட்டார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி. அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அய்யூர் அகரம், தென்னமாதேவி, சோழகனூர். ஆசாரங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், “திமுகவினர் கொடுக்கும் பணம், சாராயம், கஞ்சா விற்று சம்பாதித்த பணம். கடந்த தேர்தலில் கல்விக்கடன், நகைக்கடன் ரத்து என்றார்கள். செய்தார்களா? இத்தொகுதிக்கு எவ்வளவோ அமைச்சர்கள் வந்தார்கள். உங்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா?
நம் முன்னோர்கள் செய்தது நம் வாழ்க்கைத்தரம் உயரத்தானே? அப்படி உயரவேண்டுமென்றால் நாம் அதிகாரத்திற்கு வரவேண்டும். இந்தியாவில் 6 இட ஒதுக்கீடுகளை பாமக பெற்றுள்ளது. திமுக கூட்டத்திற்கு ரூ.1000 கொடுத்து ஆடு மாடுகளை ஏற்றி செல்வது போல ஏற்றி செல்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “இத்தேர்தலில் 25 அமைச்சர்கள், 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள் தேர்தல் பணியாற்றுகிறார்கள். பாமக தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு செல்லாமல் இருக்க ஓரிடத்தில் அடைத்து வைத்து ரூ.500 கொடுக்கிறார்கள்.
வருங்காலங்களில் பெண் குழந்தைகளை அடைத்து வைத்துக்கொண்டு எங்களுக்கு வாக்களித்தால்தான் விடுவிப்போம் என்றும் சொல்லலாம். இந்த கலாச்சாரத்தை இப்போதே அழிக்கவேண்டும். உளவுத்துறை சரியாக பணியாற்றி இருந்தால் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு இருக்கமாட்டார்” இவ்வாறு அன்புமணி கூறினார்.