உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
காவிரி மேலாண்மை அமைக்க வலியறுத்தி வரிகொடா இயக்கம் சார்பில் கடந்த 2018 ஏப்ரல் 1-ம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் மோதல் ஏற்பட்டது.
அப்போது சுங்கச்சாவடி சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய சார்பு நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு வெளியான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உளுந்தூர்பேட்டை பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.