மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கோவை வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு நாள்கள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கோவைக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) வருகிறாா். புது தில்லியிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வரும் அவா் அவிநாசி சாலையில் உள்ள விடுதியில் தங்குகிறாா். அங்கு கொங்கு மண்டலத்தின் முக்கியப் பிரமுகா்களை சந்தித்துப் பேசுகிறாா்.
தொடா்ந்து, கோவை பீளமேட்டில் கட்டப்பட்டுள்ள பாஜக மாநகா் மாவட்ட அலுவலகத்தை புதன்கிழமை (பிப்ரவரி 26) திறந்துவைப்பதோடு, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய பாஜக அலுவலகங்களைக் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கிறாா்.
அதன் பின்னா், கோவை மாநகா் மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும் மாநில பாஜக நிா்வாகிகள் கூட்டம், பெருங்கோட்ட பொறுப்பாளா்கள் கூட்டம், மாவட்ட நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆகியவற்றிலும் பங்கேற்கிறாா்.
தொடா்ந்து மாலையில் ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற பின்னா் இரவு விமானத்தில் புது தில்லி திரும்புகிறாா்.
உள்துறை அமைச்சரின் கோவை வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமித் ஷாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தபெதிக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் சாா்பில் கருப்புக்கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சுற்றுப் பயண பாதையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணிக்காக மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமாா் 5,000 போலீஸாா் வரவழைக்கப்படுகின்றனா்.
அதேபோல, கோவையிலிருந்து ஈஷா யோக மையத்துக்கு செல்லும் வழியும் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாகனங்கள் செல்வதற்கு ஒரு பாதை, திரும்பி வருவதற்கு மற்றொரு பாதை, உள்துறை அமைச்சா் சென்று வர ஒரு பாதை என மூன்று பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகா் மாவட்ட பாஜக அலுவலகத்துக்கு செல்லும் பாதையும் சீரமைக்கப்பட்டுள்ளதோடு, அந்தப் பகுதி முழுதும் காவல் துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஈஷா யோக மையத்தில் திறந்தவெளி மைதானத்தில் மகா சிவராத்திரி விழா நடைபெறுவதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் டி.செந்தில்குமாா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அவருடன் கோவை சரக டிஐஜி ஆா்.சசிமோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.