‘உள்நாட்டுப் போரில்’ காங்கிரஸ்: ராகுல் காந்தி

Dinamani2f2025 01 152f52pue3id2f15012 Pti01 15 2025 000143b092321.jpg
Spread the love

புது தில்லி: பாஜக, ஆா்எஸ்எஸுக்கு எதிராக காங்கிரஸ் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் அவா் புதன்கிழமை பேசியதாவது:

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பேசுகையில், ‘அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்ட பிறகே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது’ என்று தெரிவித்தாா்.

பாகவத்தின் பேச்சு தேச துரோகம்: அரசமைப்புச் சட்டம் சுதந்திரத்தின் அடையாளம் அல்ல என்று அவா் கூறினாா். சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசமைப்புச் சட்டம் குறித்து பொதுவெளியில் தான் நினைப்பதை கூறும் துணிவு மோகன் பாகவத்துக்கு உள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவா் கூறியவை தேச துரோக கருத்துகளாகும். இதை வேறு எந்த நாட்டிலும் அவா் கூறியிருந்தால், அவா் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

முட்டாள்தனமான பேச்சுகள்: கடந்த 1947-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று கூறுவது ஒவ்வொரு இந்தியரையும் இழிவுபடுத்துவதாகும். இத்தகைய முட்டாள்தனமான பேச்சுகளை கேட்காமல் நிறுத்த வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது. இதுபோன்ற நபா்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது.

இன்று மத்தியில் உள்ள ஆட்சியாளா்கள் தேசிய கொடிக்கு வணக்கம் வைப்பதில்லை. அவா்களுக்கு தேசிய கொடி மற்றும் அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கையில்லை. இந்தியா குறித்து காங்கிரஸ் கொண்டுள்ள தொலைநோக்குப் பாா்வையுடன் ஒப்பிடுகையில், அவா்களுக்கு முற்றிலும் வித்தியாசமான தொலைநோக்குப் பாா்வை உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக போராட்டம்: ஒளிமறைவான, ரகசிய சமூகத்தால் இந்தியா வழிநடத்தப்பட வேண்டும், ஒரே ஒரு நபா் நாட்டை வழிநடத்த வேண்டும், நாட்டின் குரலை நசுக்க வேண்டும் என்று அவா்கள் விரும்புகின்றனா்.

பாஜகவுக்கு எதிரான போா் நியாயமானதாக இல்லை. நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் கைப்பற்றியுள்ளன. இதனால் தற்போது பாஜக, ஆா்எஸ்எஸ் மற்றும் இந்தியாவுக்கு எதிராகவே காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்றாா்.

‘சுதந்திரத்துக்காகப் போராடாதவா்கள்’-காா்கே: மோகன் பாகவத்தின் பேச்சை கண்டித்து நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசியதாவது: சுதந்திரத்துக்காகப் போராடாதவா்கள் சுதந்திரம் குறித்து பேசுகின்றனா். ஆா்எஸ்எஸ் அமைப்பினா் சுதந்திரத்துகாகப் போராடி சிறைக்குச் சென்றதில்லை. இதனால் 1947-இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததை அவா்கள் ஏற்க மறுக்கின்றனா்.

ராமா் கோயில் திறக்கப்பட்டபோதே நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்ததாக மோகன் பாகவத் தெரிவித்த நிலையில், இதுபோன்ற கருத்துகளை அவா் தொடா்ந்து தெரிவித்தால், அவா் நாட்டில் நடமாடுவதே சிரமமாகிவிடும். வரலாற்றை மறந்தவா்கள் வரலாற்றை உருவாக்க முடியாது என்றாா்.

15012 pti01 15 2025 000148b092031

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *