உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையம் அமைக்க தமிழக மின்வாரியம் திட்டம் | Tamil Nadu Electricity Board plans to set up public charging centers

1357457.jpg
Spread the love

மின்சார வாகனங்களுக்கு எளிதில் சார்ஜிங் செய்வதற்கான வசதி கிடைக்க, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையங்களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் விதமாக பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக பேட்டரியில் ஓடும் வாகனங்கள், சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்கு ஏற்ப பலரும் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். மின்சார வாகனங்களுக்கு எளிதில் சார்ஜிங் வசதி கிடைக்க தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 25 கி.மீ. தூரத்துக்கும் ஒரு சார்ஜிங் மையம், நகரங்களில் ஒவ்வொரு 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு மையம் அமைக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி, தமிழக மின்வாரியம் முதற்கட்டமாக, 100 துணை மின்நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் சார்ஜிங் மையங்களை அமைக்க முடிவு செய்தது. ஆனால், நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அதற்கான பணிகளை மேற்கொள்ளவில்லை. தற்போது, பசுமை மின்திட்டங்களை ஊக்குவிக்க மின்வாரியத்தின் துணை நிறுவனமான மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இருந்து பசுமை எரிசக்தி கழகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி சென்னை மாவட்டத்தில், மாநகராட்சியுடன் இணைந்து 100 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதேபோல் மற்ற மாநகராட்சிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலா 5 முதல் 10 வரை சார்ஜிங் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘முக்கிய நகரங்களில் பொது சார்ஜிங் மையங்கள் அமைக்க போதிய இடம் கிடைப்பதில் சிரமமாக உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால், தமிழகம் முழுவதும் தடையின்றி சார்ஜிங் வசதி கிடைக்கும்’’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *