49-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புத்தகங்களின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. புதிய புத்தக வெளியீடுகளும், எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்கும் பாலமாக, தினம் ஒரு பேச்சாளரின் பேச்சுக்களோடும், புத்தகக் காட்சி காணும் இடமெல்லாம் ஜனத்திரளுடன் காட்சியளிக்கிறது. இதற்கென நந்தனம் மெட்ரோவில் இருந்து பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் நந்தனம் மெட்ரோ நிலையத்திலிருந்து, புத்தக காட்சி நடைபெறும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தின் நுழைவு வாயில் வரை சாலையோர புத்தகக் கடைகள் வழக்கம்போல் முளைத்திருக்கின்றன. சாலையோர பகுதியில் புத்தக வியாபாரிகள் குறைந்த விலையில் புத்தகங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
அவர்களிடம் சாலையோரத்தில் புத்தகங்களை விற்பதால் ஏற்படும் அசெளகரியங்களையும் வாசகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பற்றியும் கேட்டறிய நாம் அவர்களை சந்தித்து பேசினோம்.

பெயர் குறிப்பிட விரும்பாத வியாபாரிகள் நம்மிடம் பேசுகையில், “எங்களிடம் போதிய தொகை இல்லாததால் புத்தகக் காட்சி உள்அரங்கில் எங்களால் புத்தக அரங்கு அமைக்க முடியாத சூழல் உள்ளது.
வருடா வருடம் நாங்கள் இந்த சாலையை தான் நம்பி இங்கே புத்தகக் கடையை விரிக்கிறோம். உள்ளே கிடைப்பதை விட பத்து ரூபாய், 20 ரூபாய் குறைந்த விலையிலேயே, புதிய புத்தகங்களும், பழைய புத்தகங்களும் நாங்கள் விற்பனை செய்கிறோம். வாசகர்களும் எங்களை நம்பி புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். இங்கே புத்தகக் கடையை விரிப்பதற்கு போலீஸாரும் பல கெடுபிடிகளை விதித்தனர். ஆனால் நாங்கள் மேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கடை அமைத்திருக்கிறோம்.