'உழைச்சவங்களுக்கு மதிப்பே இல்லையா?' – பனையூர் அலுவலகம் முற்றுகை; குமுறும் நிர்வாகிகள்!

Spread the love

பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தை நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் முற்றுகையிட்டிருப்பதால் பரபரப்பாகியிருக்கிறது.

பனையூர்
பனையூர்

தவெக சார்பில் 120 மாவட்டச் செயலாளர்களை விஜய் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.இன்னும் சில தொகுதிகள் மட்டும் மிச்சம். அந்தத் தொகுதிகளுக்கான மா.செக்களையும் நிர்வாகிகளையும் அறிவிக்காமல் கிடப்பிலேயே போட்டிருந்தார்கள். அதில் தூத்துக்குடி மாவட்டமும் ஒன்று. தூத்துக்குடியில் உள்ள 6 தொகுதிகளுக்குமே மா.செக்களை நியமிக்காமலேயே வைத்திருந்தார்கள்

இந்நிலையில், நேற்றிரவு திடீரென எஞ்சிய மாவட்டங்களுக்கான மா.செக்களை அறிவிக்கப்போவதாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு செய்தி சொல்லப்பட்டது. இந்நிலையில், காலை முதலே பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட ஆரம்பித்தனர். தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவிர்த்து மற்ற 5 தொகுதிகளுக்கும் மா.செக்கள் அறிவிக்கப்படுவதாக கூறினார்கள். தூத்துக்குடி மத்திய மாவட்டத்துக்கு சாமுவேல் என்பவர் மா.செவாக நியமிக்கப்படவிருக்கிறார் என்ற தகவகல் வெளியானது .

அஜிதா
அஜிதா

அவர் தன்னுடைய ஆதரவாளர்களோடு பனையூர் வந்திருந்தார். சாமுவேலின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியை சேர்ந்த பெண் நிர்வாகி தன்னுடைய ஆதரவாளர்களுடன் பனையூர் வந்து சேர்ந்தார். அவரை தவெகவின் அலுவலகத்துக்கு அரை கிலோ மீட்டருக்கு முன்பாகவே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை கலைந்து போகுமாறும் அறிவுறுத்தினர். ‘2 வருசமா உண்மையா உழைச்சவங்களுக்கு எந்த மதிப்பும் இல்ல. தொகுதிக்குள்ள எந்த வேலையும் செய்யாத செல்வாக்கே இல்லாத ஒரு ஆளுக்கு போஸ்டிங் போட்டா என்ன நியாயம்?’ என அஜிதாவின் ஆதரவாளர்கள் முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் விஜய்யின் கூட்டங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட பணியமர்த்தப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஷபியுல்லா அஜிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அரைமணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையிலும் அஜிதா சமாதானம் ஆகவில்லை. விஜய் வரும் போது இங்கிருந்து பிரச்னை செய்துவிடாதீர்கள் எனக்கூறி அஜிதாவை பக்கத்து தெருவுக்கு அனுப்பி வைத்தனர்.

பனையூர்
பனையூர்

அங்கே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த அஜிதாவிடம், ‘இந்த முறையும் நாம தளபதியை பார்த்து பிரச்னையை சொல்லாம விட்டுட்டா, அவ்வளவுதான் எல்லாமே முடிஞ்சிடும்’ என அவரது ஆதரவாளர்கள் கூறியிருக்கின்றனர். உடனடியாக மீண்டும் பனையூர் அலுவலகத்தை நோக்கி ஆதரவாளர்களுடன் வந்த அஜிதா, விஜய்யின் கார் வருகையில் அவரிடம் முறையிட்டு விட வேண்டுமென ஆதரவாளர்களோடு காத்திருக்கிறார்.

அஜிதா
அஜிதா

தூத்துக்குடி மாவட்டம் போக திருத்துறைப்பூண்டியில் இருந்தும் நூறு நிர்வாகிகள் தங்கள் மாவட்டச் செயலாளர் குறித்து விஜய்யிடம் புகாரளிக்க காத்திருக்கின்றனர். பெண் பவுன்சர்களையெல்லாம் தயார் செய்து ஆனந்தும் இவர்களை தடுத்து நிறுத்த தயாராக இருப்பதால் பனையூரே பரபரப்பாகிக் கிடக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *