ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா (39), சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லிம் வீரர் ஆவார். கடந்த 2011-ம் ஆண்டில் முதல்முறையாக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 87 டெஸ்ட், 40 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 8,001 ரன்கள் எடுத்துள்ளார்.
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக கவாஜா பங்காற்றினார். அந்தக் காலகட்டத்தில் மட்டும் 17 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள், 7 அரைசதங்களுடன் 1,621 ரன்கள் குவித்தார்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவருடைய டெஸ்ட் பேட்டிங் சராசரி 25.93 மற்றும் 36.11 எனக் கவனம் ஈர்க்கவில்லை. நடந்துவரும் ஆஷஸ் தொடரில் கூட 5 இன்னிங்ஸ்களில் வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்தச் சூழலில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், “ஆஷஸ் தொடரில் 5வது டெஸ்டில் கவாஜா ஓய்வை அறிவிக்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.