உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்தவர் தீபக் (39). ஆட்டோ டிரைவரான தீபக், தனது ஆட்டோவிற்குத் தேவையான பேட்டரியை வாங்குவதற்காக விருந்தாவன் சென்று கொண்டிருந்தபோது, வழியில் அவரை பாம்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே கடித்தப் பாம்பைப் பிடித்து, குளிருக்குத்தான் அணிந்திருந்த ஜாக்கெட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் உடனே சிகிச்சை கொடுக்கவில்லை. அவரிடம் இருந்த பாம்பைப் பார்த்து டாக்டர்கள் சிகிச்சை கொடுக்க பயந்தனர். டாக்டர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
பொதுமக்களும், அங்கு இருந்தவர்களும் பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதோடு அங்கு இருந்தவர்கள் பாம்பை விட்டுவிடும்படி கூறினர். ஆனால் அவர் பாம்பை விட மறுத்துவிட்டார்.

போலீஸார் விரைந்து வந்து தீபக்கை சமாதானப்படுத்தி அவரிடமிருந்த பாம்பை ஒரு பாக்ஸில் வாங்கினர். அதன் பிறகுதான் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்தனர். தற்போது அவரின் உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவ அதிகாரி டாக்டர் நீரஜ் கூறுகையில், “‘நோயாளியிடம், பாம்பால் மற்ற நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லி பாம்பை வெளியில் விடும்படி கேட்டுக்கொண்டோம்” என்றார். ஆனால் இது குறித்து தீபக் கூறுகையில், ”டாக்டர்கள் எனக்கு சிகிச்சை கொடுக்காமல் அரை மணி நேரம் காக்க வைத்தனர். அவர்கள் என்னை சாலையில் அமர வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சையளிக்க போதிய வசதி இல்லை” என்று குற்றம் சாட்டினார்.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ”கடித்த பாம்பு தீபக்கிற்கு சொந்தமானதாக இருக்கவேண்டும் என்று சந்தேகப்படுகிறோம்” என்று தெரிவித்தனர். பாம்பை பெட்டியில் பிடித்த பிறகுதான் மருத்துவமனையில் இருந்த மற்றவர்கள் நிம்மதி அடைந்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.