ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் கட்டுப்பாடு யாருக்கு பொருந்தும்? – உயர் நீதிமன்றம் விளக்கம் | What are the restrictions imposed on visiting Ooty and Kodaikanal? – HC explains

1356945.jpg
Spread the love

சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்லும் தனியார் சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வரும் வரை கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு வரும் ஜூன் இறுதி வரை ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகளை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ஊட்டிக்கு வார நாட்களில் தினமும் 6 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதிநாட்களில் 6 ஆயிரம் வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்திய நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வனத்துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன் ஆகியோர் முறையீடு செய்தனர்.

அப்போது நீதிபதிகள், “ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. தனியார் சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் அரசுப் பேருந்துகளில் சென்று வரட்டும்,” என்றனர். பின்னர் அரசு தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனு வரும் ஏப்.8-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *