இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், “வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை பகுதிக்குள் கடந்த 11-ம் தேதி இரவு அத்துமீறி நுழைந்து திருட்டுத்தனமாக மண் மற்றும் கற்களை உடைத்த குற்றத்திற்காக சுரேஷ், அப்பாஸ் அருண், பஷீர், சீனி, சிவகுமார், மணி உட்பட ஊட்டியைச் சேர்ந்த 7 நபர்களைக் கையும் களவுமாகக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

இந்தத் தொழிற்சாலை ஆய்வகத்தில் பணியாற்றி வந்த முன்னாள் அதிகாரி மோகன்ராஜ் பேசுகையில், “வெள்ளிக் கட்டிகளில் நைட்ரேட் கலந்து சில்வர் நைட்ரேட்டாக மாற்றப்படும். ஃபிலிம் தயாரிப்பில் இந்தச் சேர்மம் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. ஆய்வகத்திலிருந்து வெளியேறும் கழிவில் தங்கம், வெள்ளி போன்றவை இருக்கும்.
பல சமயங்களில் மறுசுத்திகரிப்பு செய்து எடுத்துக் கொள்ளப்படும். அதிலும் மீதமான கழிவுகள் ஒரு இடத்தில் சேகரித்து வைக்கப்படும். அதை அறிந்த கும்பல்தான் தங்கம், வெள்ளி கலந்த மண்ணைத் திருடிச் சென்று அதிலிருந்து இந்த உலோகங்களைப் பிரித்தெடுக்கிறார்கள்” என்றார்.