சென்னை: ‘ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1251.39 கோடி நிலுவை ஊதியத்தை அரசு பெற்றுத் தரவேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்றுவரை ரூ.1251.39 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் தமிழகத்துக்கு 12 கோடி மனித வேலை நாட்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்டதை விட மிகவும் குறைவு.
ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக மக்களுக்கு 150 நாட்கள் வேலை பெற்று தருவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, மனித வேலைநாட்கள் குறைக்கப்பட்டிருப்பதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பணிகளுக்கான ஊதியத்தைப் பெற்றுத்தர வேண்டியது திமுக அரசின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை மத்திய அரசிடமிருந்து திமுக அரசு பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.