ஆடியோ சர்ச்சை
2021-ல் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற இந்த ஆட்சியின் போதுதான், முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஒரு ஆடியோவில், “முதல்வர் குடும்பத்தினர் உதயநிதி மற்றும் சபரீசன் ஓராண்டில் ரூ.30,000 கோடி சம்பாதித்துவிட்டனர்” என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், பழனிவேல் தியாகராஜன் ‘அது நான் அல்ல’ என மறுத்திருந்தார்.
மேலும், முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘தி.மு.க பைல்1…2…3..’ என பரபரப்பான செய்தியாளர் சந்திப்பெல்லாம் நடத்தினார். மத்தியிலிருந்து வரும் ஆளும் அரசின் தலைவர்கள் தி.மு.க மீது சுமத்தும் பிரதான குற்றச்சாட்டுகளில் ‘தி.மு.க ஊழல் கட்சி’ என்ற வாசகத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அதன் பிறகு அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டது, பிறகு குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை என நீதிமன்றம் ஜாமீன் அளித்தது போன்றவை தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பான காலகட்டங்கள். இப்போதுக்கூட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக கடந்த 56 மாத கால ஆட்சியில் பல்வேறு துறைகளில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக ஆளுநரிடம் மனு அளித்திருக்கிறார்.
கைகொடுக்குமா பிரம்மாஸ்திரம்?
2021-ல் திமுக ஆளுநரிடம் ஊழல் பட்டியல் வழங்கியது போல தற்போது அதே பாணியிலான ஊழல் பட்டியலை அ.தி.மு.க-வும் ஆளுநரிடம் வழங்கியிருக்கிறது.
மேலும் திமுகவுக்கு எதிராக மீண்டும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஊழல் விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் வழங்கிய பட்டியலில் துறை வாரியாக ஊழல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மறுபக்கம் அதிமுக எம்.பி இன்பதுரை மூலம், உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்க பாஜகவும் இன்னும் பல ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதானமாக முன்வைக்க உள்ளதாம்.
ஊழல் எனும் வார்த்தை இந்த தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!