ஜா அணி – ஜெ அணி
1989-ல் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜா அணி – ஜெ அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. அதிக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் கொண்டிருந்ததால் ஜானகியே முதல்வரானார்.
இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்தில் கலவரம் வெடித்ததால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி.
1989-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டு இருந்ததால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
ஜெயலலிதாவிற்கு சேவல் சின்னமும் ஜானகிக்கு புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. கட்சி பிளவுப்பட்டு இருந்ததால் அந்தத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா
இருப்பினும் சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்தார். ஒரு கட்டத்தில் அரசியலை விட்டு ஜானகி விலக அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவின் கைக்கு வந்துவிட்டது.
1989 மார்ச் 25 ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் கருணாநிதி பட்ஜெட்டை படித்தபோது இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
அந்தக் கலவரத்தில் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. தலைவிரி கோலமாக்கப்பட்டு வெளியே வந்த ஜெயலலிதா மீண்டும் சட்டமன்றத்திற்குள் முதல்வராகத் தான் காலடி எடுத்து வைப்பேன் என்று சபதமிட்டார்.