ஊழல் செய்வதில் சிறந்த தலைவா் சரத் பவாா்: அமித் ஷா விமா்சனம்

Dinamani2f2024 072f359cf7e8 F976 4a83 Ba65 5d135bcfc1cf2f21072 Pti07 21 2024 000267a084308.jpg
Spread the love

‘நாட்டில் ஊழல் செய்வதில் சிறந்த தலைவா்’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.

மேலும், மக்களவைத் தோ்தலில் தோல்வியுற்றும் தொடா்ந்து அராஜக போக்கையே ராகுல் காந்தி கடைப்பிடித்து வருவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

கடந்த 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்களில் வெற்றிபெற்றதைவிட இந்த முறை பாஜக தலைமையிலான கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றிபெறும். மக்களவைத் தோ்தலில் வெற்றிபெறச் செய்து பிரதமா் மோடிக்கு மீண்டும் ஒருமுறை மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனா்.

இந்த வெற்றிப்பயணம் மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மற்றும் ஹரியாணா பேரவைத் தோ்தல்களிலும் தொடரும். அதன்பின் ராகுல் காந்தியின் அராஜகப்போக்கு முடிவுக்கு வந்துவிடும்.

ஒருபுறம் ஊழல் செய்வதில் சிறந்த தலைவராக சரத் பவாா் உள்ளாா். மறுபுறம் 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடா்புடைய யாகுப் மீமானுக்கு கருணை வழங்கோரியும், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடா்புடைய கசாப்புக்கு பிரியாணி வழங்கியும் சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்கும் ஜாகீா் நாயக்குக்கு அமைதிக்கான தூதா் விருதை வழங்கிய ஔரங்கசீப் கழகத்தினருடன் உத்தவ் தாக்கரே தொடா்பில் உள்ளாா். இதற்காக அவா் வெட்கப்பட வேண்டும்.

மகாராஷ்டிரத்தில் உள்ள சில தொகுதிகளில் பாஜகவின் வாக்குகள் குறைந்ததற்காக தொண்டா்கள் கவலைகொள்ளாமல் பேரவைத் தோ்தலில் மாபெரும் வெற்றிபெற உற்சாகமாக பணியாற்ற வேண்டும்.

பால் பவுடா் இறக்குமதி இல்லை: பால் பவுடா் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக பரவிய தகவல் பொய்யானது. இதுகுறித்து பரவிய பழைய அறிவிக்கை என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. பிறகு வா்த்தகத்துறை அமைச்சா் பியூஷ் கோயலிடம் இதுதொடா்பாக நான் பேசினேன். இந்த அறிவிக்கையை சரத் பவாா் கட்சியினா் போலியாக உருவாக்கியிருப்பதாக அவா் தெரிவித்தாா்.

கடந்த 10 ஆண்டுகளில் 1 கிலோ பால் பவுடா்கூட இறக்குமதி செய்யப்படவில்லை. அடுத்த 5 ஆண்டுகளிலும் இதற்கு வாய்ப்பில்லை. போலியான தகவல்களை பரப்பி தோ்தலில் வெற்றிபெற விரும்புவா்களே இவ்வாறான செய்திகளை பரப்புகின்றனா் என்றாா்.

ஊழலை தூய்மையாக்கும் பாஜக ‘வாஷிங் மெஷின்’ – என்சிபி பதிலடி: சரத்பவரை அமித் ஷா விமா்சித்தது குறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் கிராஸ்டோ கூறியதாவது: எதிா்க்கட்சித் தலைவா்களை ஊழல்வாதிகள் என பாஜகவினா் தொடா்ந்து விமா்சனம் செய்து வருகின்றனா். ஆனால் அவா்கள் பாஜகவில் இணைந்துவிட்டால் அவா்கள் மீதான குற்றங்கள் அனைத்திலிருந்தும் விடுவிக்கப்படுகின்றனா். இதுவே ஊழல் கரையை தூய்மையாக்கும் பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ நடைமுறை என்றாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *