திருநெல்வேலி: ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரியை திருநெல்வேலி மாநகராட்சியில் பணியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மனு அளித்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையராக இருந்த ஜஹாங்கீர் பாஷா, கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கினார். ரயில் நிலையத்துக்கு காரில் சென்றபோது அவரை மடக்கி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ. 11.70 லட்சம், அவரது காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
காத்திருப்போர் பட்டியலுக்கு அவர் மாற்றப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய 2 வாரத்தில், திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக சமீபத்தில் ஜஹாங்கீர் பாஷா நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜஹாங்கீர் பாஷா திருநெல்வேலி மாநகராட்சியில் பொறுப்பேற்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி, தமிழ்தேச தன்னுரிமை கட்சி, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயனிடம் நேற்று மனு அளித்தனர்.
அதில், ஊட்டி அருகே கணக்கில் வராத பணத்துடன் சிக்கிய ஜஹாங்கீர் பாஷாவை, திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்திருக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையர் பதவியில் இருந்து ஜஹாங்கீர் பாஷாவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய, முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் ஜஹாங்கீர் பாஷாவை பணி அமர்த்தினால் மக்களை திரட்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட நேரிடும் என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டனர்.