எஃப்ஐஆர் வெளியான விவகாரம்: காவல் துறை மீது நடவடிக்கை கோரி தேசிய மகளிர் ஆணையத்துக்கு அண்ணாமலை கடிதம் | FIR leaked issue: Annamalai writes to NCW seeking action against police

1344690.jpg
Spread the love

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் முதல் தகவல் அறிக்கையை பகிர்ந்த காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்துக்கு அண்ணாமலை கடிதம் அனுப்பி உள்ளார்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாள விவரங்களை, அவரது வீட்டு முகவரியுடன் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் முதல் தகவல் அறிக்கையை பகிர்ந்த போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் அனுப்பி உள்ளார்.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜய கிஷோர் ராஹத்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23-ம் தேதி தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை மிரட்டி, சாலையோர உணவுக் கடை நடத்தும் ஞானசேகரன் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இவர் சைதாப்பேட்டை தொகுதி திமுக நிர்வாகி என்பதும் தெரியவந்துள்ளது.

திமுகவை சேர்ந்தவர்கள் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது இது முதல்முறையல்ல. தஞ்சாவூர், விருதுநகர், சென்னை விருகம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் ஏற்கெனவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள், உள்ளூர் திமுக தலைவர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் முழு ஆதரவுடன் தமிழக காவல் துறையில் செல்வாக்கு பெற்றிருப்பது வருத்தம் அளிக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கையின் நகல் மூலம் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாள விவரங்களை, அவரது வீட்டு முகவரியுடன் போலீஸார் பகிர்ந்துள்ளனர். இது சகிக்க முடியாத விஷயம். காவல் துறையினரின் இந்த கொடூரமான செயல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் இத்தகைய செயலில் ஈடுபட்ட நபர்கள் மீதும், மாநில காவல் துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *