எக்ஸ் தள வீடியோ பதிவுக்கு ரெஸ்பான்ஸ்: தாம்பரம் அருகே துணை முதல்வர் உதயநிதி ஆய்வு | deputy cm udhayanidhi stalin review near tambaram for water logging issue

1326623.jpg
Spread the love

செங்கல்பட்டு: தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது எனவும், நடவடிக்கை எடுக்க கோரியும் குடியிருப்பு வாசி ஒருவர் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு துணை முதல்வரை டேக் செய்தார். அவரது கோரிக்கையை ஏற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே அகரம் தென் ஊராட்சி, கஸ்பாபுரம் கிராமம் கிருஷ்ணா நகர் கணேஷ் நகர் மெயின் ரோடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, வீடியோவை உதயநிதி ஸ்டாலினுக்கு டேக் செய்திருந்தார்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜுக்கு உதயநிதி உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் நேற்று இரவு முதல் அப்பகுதியில் மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்றது. சுமார் 4 அடிக்கு மேல் தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு தொடர்ந்து அப்பகுதியில் மழை நீரை முழுமையாக வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

17290838903078

இந்நிலையில், இந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கஸ்பாபுரம் பகுதிக்கு இன்று மதியம் உதயநிதி ஸ்டாலின் நேரில் வருகை தந்து இரவுக்குள் அப்பகுதியில் உள்ள மழை நீர் அனைத்தையும் முழுமையாக வெளியேற்ற வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜுக்கு உத்தரவிட்டார். மேலும் அந்த பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் நிரந்தரமாக தேங்காத வகையில், அகரம் ஏரிக்கு மழை நீரை கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைக்க நிரந்தர திட்டம் தயாரித்து அதற்கான மதிப்பீட்டை உடனடியாக அனுப்புமாறு மாவட்ட ஆட்சியரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆய்வின்போது குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ், உட்பட பலர் உடன் இருந்தனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கோரிக்கை பதிவிட்டு இருந்த அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ் கூறுகையில்: “என்னுடைய எக்ஸ் தள பதிவை பார்த்து உடனடியாக நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இந்த பகுதிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு முறையும் மழை காலத்தில் இந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்குவது வழக்கம். கிருஷ்ணா நகர், 6வது தெரு, கணேஷ் நகர் பிரதான சாலை பகுதிகளில் சிறிய அளவு மழை பெய்தாலே இந்த சாலையில் தண்ணீர் நின்றுவிடும்.

பலமுறை ஊராட்சி தலைவர், செங்கல்பட்டு ஆட்சியர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு ஆகிய துறைகளுக்கு புகார் அளித்தும் இதுவரை இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. நிரந்தர தீர்வை காணாமல் ஒவ்வொரு முறையும் தற்காலிக தீர்வை மட்டும் செய்தனர். இம்முறை பெய்த கனமழையின் காரணமாக சாலை முழுவதும் மீண்டும் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் வரத் தொடங்கியது.உடனடியாக நான் ஒரு வீடியோ பதிவை எடுத்து அதை எனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்தேன்.

17290839113078

அதைக் கண்ட துணை முதல்வர் உடனடியாக நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த முறை இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஒரு சாமானிய மனிதனாகிய என்னுடைய பதிவை கண்ட துணை முதல்வர் நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது, மகிழ்ச்சி அளிக்கிறது. ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வரும் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருகிறேன் என உறுதி அளித்து சென்று இருக்கிறார். இது மிகவும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *