`எங்களால் விடமுடியாது’- கொரிய விளையாட்டுக்கு அடிமை; 3 சகோதரிகள் 9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

Spread the love

பாக்கெட் டைரியில் எட்டு பக்கத்துக்கு மொபைல் விளையாட்டு மற்றும் மொபைல் போனின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக எழுதியுள்ளனர். இது குறித்து தற்கொலை செய்த சிறுமிகளின் தந்தை சேதன் குமார் கூறுகையில், ”அவர்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது அவர்கள் அனைத்திலும், கொரிய பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றனர் என்று தெரிகிறது. அவர்கள் கடிதத்தில் `அப்பா, மன்னிக்கவும், கொரியாதான் எங்கள் வாழ்க்கை, கொரியா மீதான எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய காதலை, நீங்கள் என்ன சொன்னாலும், எங்களால் கைவிட முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இது போன்ற ஒரு நிலை எந்தப் பெற்றோருக்கும் அல்லது குழந்தைக்கும் நடக்கக் கூடாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட்டுகள் விளையாட அனுமதிக்கக் கூடாது. அந்த விளையாட்டைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்தால், நான் அவர்களை ஒருபோதும் விளையாட அனுமதித்திருக்க மாட்டேன்” எனக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் அவர்கள் மொபைல் விளையாட்டுக்கு அடிமையானார்கள். அதன் பிறகு அடிக்கடி பள்ளிக்குச் செல்வதை நிறுத்தினர். அதன் பிறகு ஒரேடியாக பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டனர்.

மூன்று சிறுமிகளும் கொரியப் பெயர்களையும் தங்களுக்கு சூட்டிக்கொண்டிருந்தனர். மூன்று சகோதரிகளில் நடுவில் உள்ள பிராச்சிதான் எல்லாவற்றிலும் அவர்களுக்குத் தலைவராக இருந்தார். மேலும் இந்த ஆபத்தான விளையாட்டிலும் அவரே முன்னின்று வழிநடத்தியதாக அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

விசாரணை குறித்து துணை காவல் ஆணையர் நிமிஷ் படேல் கூறுகையில், “இதுவரை நடந்த விசாரணையில் எந்தவொரு குறிப்பிட்ட விளையாட்டின் பெயரும் தெரியவரவில்லை. ஆனால் அந்தப் பெண்கள் கொரிய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டிருந்ததும், அதை தற்கொலைக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. கடந்த சில நாள்களாக, அவர்களுக்கு மொபைல் போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை அவர்களைப் பாதித்ததாகத் தெரிகிறது” என்று கூறினார்.

விளையாட்டில் சவாலை ஏற்று ஜன்னல் வழியாக குதித்தார்களா என்று கேட்டதற்கு, அது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

சிறுமிகளின் தற்கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *