தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ”ஊழல் ஆட்சியிலிருந்து மீட்டெடுத்து தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் எனப் பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
கங்காரு குட்டி போல சுற்றிக்கொண்டு உள்ள ஒருவரை முதலமைச்சர் பட்டம் சூட்ட காத்திருக்கிறது திமுக. பங்காளி சண்டை இல்லாத குடும்பங்கள் இல்லை. எங்கள் வீட்டு குடும்ப விஷயங்களை நான் மனம்விட்டு பேசினேன். தற்போது அம்மாவின் ஆட்சி அமைய ஒன்றிணைந்துள்ளோம்.
2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் பிரிந்து நின்று தேர்தலைச் சந்தித்ததால் திமுக வெற்றிபெற்றது நாங்கள் ஒன்றாகப் போட்டியிட்டு இருந்தால் மேலும் 20- 25 தொகுதியில் வெற்றிபெற்று இருப்போம்.
அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றுதான் கூறினேன், தவிர ஒரே கட்சியில் இணைய வேண்டும் எனக் கூறவில்லை.

கூட்டணியில் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் நல்ல ஒரு முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு தேனியிலிருந்து நான் அழைப்பு விடுக்கிறேன். அவரது வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கு உள்ளது. அவர் சென்ற உயரங்களுக்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன்.
எனது கோரிக்கை ஏற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஒ.பன்னீர்செல்வம். யார் பேச்சையோ கேட்டு தர்ம யுத்தம் நடத்தினர். அப்போது மட்டும் அவர் தர்ம யுத்தம் நடத்தாமல் இருந்து இருந்திருந்தால் மீண்டும் முதலமைச்சராக இருந்து இருப்பார்.

அம்மாவின் இடத்தில் எங்களுக்கு மோடிதான் இருக்கிறார். தமிழ்நாட்டை மோடி அவர்கள் தத்தெடுத்து இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற நாங்கள் துணை நிற்போம்.
நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது உடனிருப்பவர்களை வாய்ப்யிருந்தால் அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
எங்கள் தலைவர் எம்ஜிஆர் படத்தை வைத்து விட்டு எங்களை ஊழல் கட்சி என்கிறார் விஜய். சினிமா வசனம் பேசுகிறார். உங்கள் திரைப்படத்தில் கள்ள டிக்கெட் விற்பனையில் நடக்கும் ஊழல்களைத் தடுத்து நிறுத்துங்கள், முதலில் வீட்டை விட்டு வெளியே வாருங்கள்.
நாங்கள் அமைதியாக இருந்தால் நீங்கள் எது வேண்டுமானாலும் பேசலாமா? நாங்கள் வெகுண்டெழுந்தால் என்ன ஆவது?

விஜயகாந்த் போல் விஜயும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றுதான் கூறினேன், எம்.ஜி.ஆர் போன்று வருவார் என்று நான் எங்கும் சொல்லவில்லை” எனத் தெரிவித்தார்