‘எங்கள் கஷ்டத்தை புரிந்து கொள்ளவில்லை’ – எட்டயபுரம் அருகே அரசுப் பேருந்தில் ஏற மறுத்து போராடிய மாணவிகள் | Students protest by refusing to board a government bus near Ettayapuram

1372491
Spread the love

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே அரசு பேருந்தில் இருந்து மாணவ, மாணவிகள் இறக்கி விடப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று காலை அரசுப் பேருந்தில் ஏற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் காலை 7.55 மணிக்கு மேலக்கரந்தைக்கு வரும் கோவில்பட்டியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் அரசுப் பேருந்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

காலையில் 7.55 மணிக்கு வரும் அரசுப் பேருந்து முறையாக நின்று மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்வது கிடையாது என கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மேலக்கரந்தை நிறுத்தத்தில் காத்திருந்த மாணவ, மாணவிகள் பேருந்து வந்ததும் அதில் ஏறினர். ஆனால் கூட்டம் அதிகமாக இருக்கிறது எனக் கூறி, அடுத்த நிறுத்தமான வெம்பூர் விலக்கில் மாணவ, மாணவிகளை ஓட்டுநரும், நடத்துனரும் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

இதனால் அவர்கள் பள்ளி செல்ல முடியாததால் வெம்பூர் விலக்கிலிருந்து 4 கி.மீ. நடந்தே மேலக்கரந்தைக்கு வந்தனர். ஆத்திரமடைந்த பெற்றோர் இன்று காலை கோவில்பட்டியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் அரசுப் பேருந்து சிறை பிடிப்போம் என அறிவித்தனர். தகவல் அறிந்து மாசார்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா தலைமையில் ஏராளமான போலீஸார் மேலக்கரந்தை விலக்கில் குவிக்கப்பட்டனர்.

இன்று காலை கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன், தமாகா வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால் ஆகியோர் அரசு பேருந்தை சிறை பிடிக்க மாணவ மாணவிகளுடன் காத்திருந்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் இனிவரும் காலங்களில் இது போன்ற தவறு நடக்காது. அதனால் போராட்டம் நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர்.

நீண்ட காலமாக நாங்கள் கோரிக்கை விடுத்தும் பள்ளி மாணவர்கள் செல்லும் அரசு பேருந்தில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது. அதனால் இதற்கு இன்றே தீர்வு காண வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, காலை 7.55 மணிக்கு அருப்புக்கோட்டை செல்லும் அரசு பேருந்து வந்தது. அதில் மாணவ மாணவிகள் ஏற மறுத்து வெளியே நின்றனர். அவர்களிடம் போக்குவரத்து கழக தூத்துக்குடி கோட்ட மேலாளர் ரமேசன், கோவில்பட்டி கிளை மேலாளர் ஜெகநாதன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எங்களது கஷ்டத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் தினமும் சிரமப்பட்டு வருகிறோம். நீங்கள் ஒரு நாள் வந்து அனைத்தையும் சரி செய்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறீர்கள். ஆனாலும் தொடர்ந்து நாங்கள் பள்ளி செல்வதில் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது, என பேருந்தில் ஏற மறுத்து மாணவிகள் தெரிவித்தனர். இதனால் சாலையோரம் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது.

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உங்களது பெற்றோரை போன்றவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்படியென்றால் அவர்கள் தங்களது குழந்தைகளை பேருந்தில் இருந்து கீழே விழுவதற்கு தான் வழிவகை செய்வார்களா என மாணவ, மாணவிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய போக்குவரத்துக் கழக அதிகாரிகள், காலை 7.55 மணிக்கு அடுத்து 8.35 மணிக்கு அருப்புக்கோட்டைக்கு செல்லும் அரசு பேருந்தை சுமார் 20 நிமிடங்கள் முன்னதாக இயக்க நடவடிக்கை எடுத்து, தாப்பாத்தி, மேலக்கரந்தை, வெம்பூர் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பள்ளிக்கு சிரமம் இல்லாமல் சென்று வர தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

அப்போது காலை 8:35 மணிக்கு வரும் பேருந்தில் இலவச பயண அட்டையை ஏற்க மறுத்து எங்களிடம் டிக்கெட் கட்டணம் வசூல் செய்கின்றனர் என மாணவிகள் தெரிவித்தனர். அது குறித்தும் இன்றே நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, மாணவ மாணவிகள் பேருந்தில் ஏறி பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் மேலக்கரந்தை பேருந்து நிறுத்தத்தில், சுமார் அரை மணி நேரம் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து காலை 8.35 மணிக்கு மேலக்கரந்தைக்கு வந்த அரசு பேருந்து நடத்துநரிடம், இலவச பயண அட்டை வைத்துள்ள மாணவ, மாணவிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூல் செய்வது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இலவச பயண அட்டை வைத்துள்ள மாணவ, மாணவிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூல் செய்யக் கூடாது, அவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *