விருதுநகர்: எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரில் பாஜக வாக்குச்சாவடி குழு பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அருப்புக்கோட்டையில் பாரதி மகாலிலும், விருதுநகரில் எஸ்.எஸ்.கே. கிராண்ட் மகாலிலும் நடைபெற்ற கூட்டங்களுக்கு கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில இணை பொறுப்பாளருமான சுதாகர் ரெட்டி முன்னிலை வகித்தார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில், பாஜக நிர்வாகிகளுடன் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “2026 சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும், அதற்காக வாக்குச் சாவடி வாரியாக பொறுப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு நலத்திட்டப் பணிகளை வாக்காளர்களிடம் நேரடியாகச் சென்று தெரிவித்து விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரில் அவர் அளித்த பேட்டியில், திருநெல்வேலியில் இம்மாதம் 17-ம் தேதி 5 நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி மாநாடு முதன் முதலாக நடைபெற உள்ளது. அதுகுறித்து அருப்புக்கோட்டை, விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் ஆய்வு செய்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை சந்தித்துப் பேசியுள்ளேன். அனைத்து தொகுதியிலும் பூத் கமிட்டி அமைத்துள்ளோம்.
கூட்டணி முடிவு செய்யப்பட்ட பின்னர் யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் எந்த இடங்கள் என முடிவு செய்யப்படும்.
‘தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக தான் பழனிசாமி பாஜகவோடு இணைந்துள்ளார்’ என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளது முற்றிலும் தவறான கருத்து. பன்னீர்செல்வம் குறித்து கருத்துக் கூற முடியாது. அவர் எங்களுடன் கூட்டணியில் இருந்தால் நான் கருத்து கூறலாம்.
அவர் இப்போது விலகிப்போன பின்பு ஏதாவது கூறினால் அது தனிப்பட்ட நபரைப் பற்றி கூறும் கருத்தாக மாறிவிடும். தமிழ்நாட்டில் செயின் பறிப்பு மட்டுமல்லாமல் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் அதிகமாக நடக்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலைகள் நடந்துள்ளன. தென் மாவட்டத்தில் அதேபோல படுகொலைகள் நடைபெறுகிறது. இதற்கு என்ன காரணம் என்றால் தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகமாக உள்ளது. சொத்து வரி, மின்சார கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
நடுத்தர தொழில்கள் செய்பவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டிய அரசு. வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டிய அரசு. எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம். தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிமான வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் எவ்வாறு தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கி வருகிறோம். எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.