கரூர் துயரச்சம்பவத்தில் எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரூர் துயரச்சம்பவத்தில் 40 அப்பாவிகளை பறிகொடுத்துள்ளோம். இன்னும் கவலைக்கிடமாய் சிலர் உள்ளனர். அழுகுரல் மட்டுமே கேட்கிறது. தமிழகத்தில் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை.
இனியும் நடக்கக்கூடாது. பலியானவர்கள் குடும்பங்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்; இதை கருத்தில் கொண்டு கரூர் பாஜக சார்பில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் கொடுக்கப்படும். மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் உதவ தீர்மானித்துள்ளோம்.
எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான். முதல் தவறு மாவட்ட நிர்வாகம், காவலர்கள் மீதுதான். அவர்கள் உரிய இடத்தை கொடுக்கவில்லை. வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த வாய்ப்பே இல்லையென தெரிந்தபோதும் ஏன் அனுமதி கொடுக்கிறார்கள்? சரியான இடத்தை கொடுப்பது அரசின் கடமை.