கொந்தளிப்பு
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக 170, பாஜக 23, பாமக 23, மற்றவை 18 என்கிற உடன்பாடுக்கு வந்ததாகவும் ஓ.பி.எஸ், டிடிவியை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள எடப்பாடி ஒத்துக்கொண்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், பாஜக தரப்பில் தமிழிசை சௌந்தராஜன் இதை மறுத்திருக்கிறார். டிடிவியும் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
ஆனால், நேற்றிரவு ஓ.பி.எஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று சீட்டுக்காக எடப்பாடியின் தலைமையை ஏற்று என்.டி.ஏவுக்குள் செல்ல வேண்டுமா என காட்டமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் டிடிவியை என்.டி.ஏவுக்குள் கொண்டு வர எதோ ஒருவிதத்தில் பேச்சுவார்த்தை போயிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதன் முடிவில்தான் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்திருக்கின்றனர்.
`தை பிறந்தால் வழி பிறக்கும்’
‘எடப்பாடி தலைமையிலான அதிமுகவோடு இணைய முடியாது. தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனவும் ஓ.பி.எஸ் கூறியிருக்கிறார். ஓ.பி.எஸ்ஸூக்கு முன்னால் இப்போது இருப்பது தனிக்கட்சி தொடங்கும் ஆப்ஷன் மட்டுமே. அப்படி அவர் தனிக்கட்சி தொடங்கி என்.டி.ஏவுக்குள் போகவில்லையெனில் எங்கே செல்வார் என்பதுதான் இப்போதைய கேள்வி. ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டினாலும் திமுகவோடு செல்வது ஓ.பி.எஸ்க்கு பின்னடைவையே கொடுக்கும். அதிமுகக்காரன், அம்மாவின் உண்மைத் தொண்டன் போன்ற விஷயங்களை ஓ.பி.எஸ் இனி பேசவே முடியாமல் போய்விடும். அப்படியிருக்க ஓ.பி.எஸ்க்கு விஜய் ஒரு ஆப்சனாக இருப்பார். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என ஓ.பி.எஸ் சொல்கிறார். ‘ஜனவரி 10 க்கு மேல் பெரிய மாற்றம் வரும்’ என தவெகவின் கூட்டங்களில் செங்கோட்டையன் பொடி வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்.