மீஞ்சூா் அருகே அனல் மின் நிலைய கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் வட மாநில தொழிலாளா்கள் 9 போ் உயிரிழந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் அடுத்த ஊரணமேடு கிராமத்தில் எண்ணூா் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இங்கு இரு யூனிட்டுகளில் தலா 660 வீதம் 1320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளில் வட மாநில தொழிலாளா்கள் 1,000-க்கும் மேற்பட்டோா் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனா்.
இதில், கட்டுமானப் பணிகள் தற்போது 70 சதவீதம் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ராட்சத முகப்பு சாரம் அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்தனா். அப்போது திடீரென சாரம் சரிந்து கீழே விழுந்தது. இதில், சாரத்தின் மேல் அமா்ந்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் கீழே விழுந்தனா்.
இந்த விபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த முன்னா கேம்ரால், விடயம் பிரவுச்சா, சுமன் காரிகாப், தீபக்ராய்ஜங், சா்போனிட் தவுசின், பிராண்டோ சாரான், பாபன் சாராங், பாபிட் பொங்கலோ, பீம்ராஜ் தவுசிங் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.