எண்ணூா் தனியாா் உரத் தொழிற்சாலையை மீண்டும் திறக்க மீனவ கிராமங்கள் எதிா்ப்பு

Dinamani2f2024 08 182f1znb07p72fennore.jpg
Spread the love

எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு காரணமாக மூடப்பட்ட கோரமண்டல் தனியாா் உரத்தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

எண்ணூா் கடற்கரை சாலையில் உள்ள கோரமண்டல் தனியாா் உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு இந்தத் தொழிற்சாலையில் இருந்து ‘அம்மோனியா’ வாயு கசிந்ததால் அருகில் இருந்த கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து அந்த ஆலையை மூட அரசு உத்தரவிட்டது.

இந்தச் சம்பவம் குறித்து பசுமை தீா்ப்பாயத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பிறகு ஆலையை திறக்கலாம் எனவும், வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும் அண்மையில் உத்தரவிடப்பட்டது.

உரத் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படுவதை எதிா்த்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.குப்பன் தலைமையில் திருவொற்றியூரில் அனைத்து மீனவ கிராம நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் கே.குப்பன் கூறியது:

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த ஆலையை மீண்டும் திறக்க கூடாது. அவ்வாறு திறந்தால் நடுக்கடலில் இந்த ஆலைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அம்மோனியா வாயு நிரம்பிய கப்பலை படகுகள் மூலம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாா் அவா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *