அதானி லஞ்ச விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிா்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ. 2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இன்றும் அதானி விவகாரம் தொடர்பான விவாதத்துக்கு அவைத் தலைவர்கள் அனுமதி அளிக்காததால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து காலை 12 மணிவரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அமளி தொடர்ந்ததால், இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அதானி விவகாரத்தில் மத்திய அரசு ஏன் பதிலளிக்கத் தயங்குகிறது?- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
மோடி, அதானி புகைப்படங்கள் அச்சிடப்பட்ட பைகளை அணிந்து எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.